வழுவூா் இராமையாபற்றி
ஓா் பதிவு.
பத்மஸ்ரீ வழுவூர் பாக்கியத்தம்மாள் ராமையா பிள்ளை, 1910 ஆண்டு பிறந்தாா்
பரதநாட்டியத்தில் அழகிய புதிய பாணியை உருவாக்குவதில் இவர் முன்னோடியாக இருந்தார். இது வழுவூர் பாணி என்று அழைக்கப்பட்டது.
ருக்மிணி தேவி அருண்டேல் பரதநாட்டியத்தினை பிரபலப்படுத்தினார்.
ஆனால் ராமையா பிள்ளை அதை மக்களிடம் கொண்டு சேர்த்தார்.அவரது நடன தயாரிப்புகள் மிகவும் பிரபலமாக இருக்கின்றன.
அவர் பல நடன குழுக்களையும் நடனக்கலைஞர்களையும் உருவாக்கியுள்ளார்.
இவரது மாணவர்கள் மிகவும் பிரபலமானவர்கள். அவர்களில் சிலர்.
- குமாரி கமலா
- டாக்டர் பத்மா சுப்ரமணியம்.
- திருவிதாங்கூர் சகோதரிகள் லலிதா பத்மினி ராகினி.
4.ஈ வி சரோஜா
- வைஜெயந்திமாலா பாலி
- சித்ரா விஸ்வேஸ்வரன்
- கே ஜே சரசா மற்றும் பலர்.
இந்த வழுவூர் பணியின் முக்கிய அம்சங்கள் ஆழமான உணர்ச்சிப்பூர்வமான தன்னிச்சையான அபிநயம் / முகபாவம் மற்றும் வெளிப்பாடுகளில் அதிக கவனம் செலுத்துவது. இங்கு நிறைய அசைவுகள் தத்ரூபமாகவும் வசீகரமாகவும் இருக்கின்றன. இவரது நடனத்தில் செயல்படும் வேகமும் உட்காரும் தோரணைகளும் நிலைகளும் பல வீச்சுக்களில் உள்ளன.
அதன் மற்றொரு முக்கிய அம்சம்
நடனக்காரர்களின் தலை நீங்கிய உடல் பகுதி, இடுப்பின் மேல் பகுதி லேசாக முன்னோக்கி சாய்ந்து இருக்கும்.
இதில் ஒரு அடவிலிருந்து அடுத்ததற்கு மாறும்போது திடீர் மாற்றங்கள் ஏதும் இல்லாமல் ஒரு மென்மையான ஓட்டம் இருக்கும்.
இந்த பாணியில் லஸ்ய கூறுகளை விட தாண்டவம் அதிகமாக இருக்கும்.
முக்கியமாக அந்த நடனக்கலைஞர் “தொடய மங்கலம்” என்னும் பாராயண மனப்பாடத்துடன் தொடங்குகிறார்.
இது வழுவூரின் ஞான சபேஷரின் புகழைப் பாடும் பாரம்பரியம். நேர்த்தியான குதித்தல் மற்றும் மென் பாத தாவல்கள்
போன்றவை இந்த வகை ஜதிகளின் தனித்துவமான பண்புகள் ஆகும்.
நடிகர் பத்மஸ்ரீ கமலஹாசன் கூட இந்த பாணியின் ரசிகர் ஆவார்.
இந்தப் பாணி பந்தநல்லூர் பாணிக்குப் பிறகு வளர்க்கப்பட்டது
ஆனாலும் (இது நாட்டிய சாஸ்திரத்துக்கு அதன் கொள்கைகளுக்கும் மிகப் பொருத்தமானது ஆகும்)
இது ஒரு பெரிய பின்தொடர்வோரை பெற்றது. இன்றைய தேதி வரை பரந்துபட்டு கற்பிக்கப்பட்டு வருகிறது .
இவா் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. ஆசிரியராக இருந்த “தமிழன் குரல்” எனும் பத்திரிகையில் 1955ஆம் வருஷம் ஐயா வழுவூர் ராமையா பிள்ளை அவர்கள் எழுதியுள்ள கட்டுரையை
பாா்போம்.
சிலம்புச் செல்வர் ம.பொ.சி. ஆசிரியராக இருந்த “தமிழன் குரல்” எனும் பத்திரிகையில் 1955ஆம் வருஷம் ஐயா வழுவூர் ராமையா பிள்ளை அவர்கள் எழுதியுள்ள கட்டுரை
நம் தமிழ் நாட்டில் நாட்டியக்கலை ஐம்பது வருடங்களுக்குப் பின்னால், சுமார் பத்து வருடங்களாக (அவர் சொல்வது 1955இல்) முன்னேறத் தொடங்கி தற்காலம் உன்னத ஸ்தானத்தை அடைந்திருக்கிறது.
பரத நாட்டியக் கலையின் பெருமை உலகில் எல்லோருக்கும் ஓரளவு தெரிந்து, உலகம் முழுவதும் நமது நாட்டியக் கலைக்கு நல்ல வரவேற்பும் உயர்ந்த மதிப்பும் இருந்து வருகிறது.
இது மென்மேலும் நல்ல முறையில் அபிவிருத்தியாகி கலையின் தரம் குறையாமல் தெய்வீகமான நமது பரத நாட்டியக்கலை உலகெங்கும் என்றென்றும் சிறப்பாக வியாபித்து நிலைத்திருக்க வேண்டும்.
ஶ்ரீகலையின் தரம் குறையாமல் இருக்க வேண்டுமென்றால், கலைஞர்களும், ரஸிகர்களும் இக்கலையின் பெருமையையும், கலையின் நுணுக்கங்களை யும் ஓரளவிற்கு அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.
கலைஞர்களாக உள்ளவர்கள் புத்தகங்களைப் படிப்பதனாலும், கலை நிகழ்ச்சிகளைப் பார்ப்ப தனாலும் மாத்திரம் கலைஞர்களாகிவிட முடியாது.
அநேக வருடங்கள் நல்ல குருகுலவாசம் செய்து சிறந்த குருபக்தியும், ஈச்வர பக்தியும் உள்ள வர்கள்தான் உண்மைக் கலைஞர்களாக விளங்க முடியும். குருபக்தி உள்ள வர்களுக்குத்தான் ஈச்வர அநுக்கிரகம் ஏற்படும்.
அவர்களால் செய்விக்கப் படும் நாட்டியம், நாடகம், கவிதை, சங்கீதம், சித்திரம், சிற்பம் முதலியவை கள்தான் உலகத்தில் போற்றப்பட்டுப் பிரகாசிக்க முடியும். இது அனுபவ பூர்வமான விஷயமாகும்.
உலகத்தில், மனிதர்களிடத்திலும் சகல ஜீவராசிகளிடத்திலும் இயற்கையாக ஏற்படக்கூடிய பல செயல்களில் ஏற்படும் விசேஷமான அம்சங்களை யெல்லாம் ஒன்று திரட்டி வரையறுத்து நமது முன்னோர்களாகிய அநேக மஹானுபாவர்கள் பரத சாஸ்திரங்களை எழுதியிருக்கிறார்கள்.
பசுவின் கன்றானது தன் தாயிடம் பால் அருந்தி உற்சாக மிகுதியால் குதித்து விளையாடி ஓடும்போது அதனிடம் எத்தனை விதமான அசைவு, நெளிவு, பாய்தல், குதித்தல் முதலிய அழகு நிலைகளைக் காண்கிறோம்.
இதைப் போலவே தோகையை விரித்து ஆடும் மயிலினிடத்திலும் எவ்வளவு அழகிய தோற்றங்களை நாம் காண நேரிடுகிறது!
இவ்விதமான இயற்கை நிகழ்ச்சிகளைக் கண்ட சிவபக்தர்கள் பாடிய தேவாரத்தில்
‘வண்டு பாட, மயில் ஆட, மான் கன்று துள்ள, வரிக்கெண்டை பாய’
என்று பாடியிருப்பதைக் காண்கிறோம்.
அகஸ்தியர் பரத சூத்திரத்தில் அகக்கூத்து, புறக்கூத்து, பொதுக்கூத்து என்று மூன்று விதமாகக் கூறப்படுகிறது.
அகக்கூத்து மகான்கள் த்யான நிஷ்டை யில் அவர்கள் மனக்கண்ணால் காணக்கூடியது.
புறக்கூத்து அறுபத்து நான்கு, ஆகும்
பொதுக்கூத்து பன்னிரெண்டு ஆகும்
இவைகளில் நவரசத்தை அநுசரித்த
ஆனந்த செளசியா தாண்டவம்,
அற்புதத் தாண்டவம்,
அகோர தாண்டவம்,
ஊர்த்துவ தாண்டவம்,
சதாத் தாண்டவம்,
பிரளய தாண்டவம்,
சண்டத் தாண்டவம்,
சந்தியா தாண்டவம்,
சாந்தித் தாண்டவம்
என நவதாண்டவ விவரமும்,
ஆனந்த நடனம், கெளரி தாண்டவம், சந்தியா நடனம், திரிபுர நடனம், காளி நடனம், முனி நடனம், சங்கர நடனம்
என்ற சப்த (ஏழு) தாண்டவங்களைப் பற்றியும் இன்னும் பல சாஸ்திரங்கள் விரிவாகக் கூறுகின்றன.
புறக்கூத்தாகிய 64-ம் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆடப்பட்ட வையாகும்.
அவைகளில் பாண்டரெங்கம் என்பது திரிபுராதிகளை எரித்த போது ஆடியது.
கொடுகொட்டி என்பது திரிபுராதிகளை எரித்த சுடலையில் ஈஸ்வரன் கைகொட்டி ஆடியது.
கபாலம் என்பது ப்ரம்மனின் ஐந்து சிரங்களில் ஒன்றைக் கிள்ளிக் கபாலம் ஏந்தி ஆடியது.
பதஞ்சலி வியாகிர பாதருக்காக சித்தரஹாசம் என்னும் சிதம்பரத்தில் ஆடியது ஆனந்த தாண்டவம் ஆகும்.
எனது ஜனன பூமியாகிய வழுவூரில் கரிஉரி (யானையின் தோல்) போர்த்தி – தாருகவன ரிஷிகளுக்கு ஏற்பட்டிருந்த மமதை, அகங்காரம் என்னும் மாயையான இருள் நீங்கி ஞானோதயமான சுடர் விளங்க ஆடியது நவதாண்டவமாகும்.
மூர்த்தியை ஞானமூர்த்தி என்றும், சபையை ஞானசபை என்றும் அவ்வூரை ஞானபூமி என்றும் சொல்வதுண்டு.
இவைகள் தவிர,
ப்பாவப் பிரகாச ரசமஞ்சரி,
அமர சதகம்,
முதலிய நூல்களிலும் நந்திகேஸ்வரர், பரதர் முதலியவர்களின் பரத சாஸ்திரத் திலும் ப்பாவங்கள் அதனால் ஏற்படும் நவரசங்கள், நாயகா நாயகி விதங்கள் பற்றியும் ராகம், தாளம், கீதம், வாத்யம் முதலியவற்றிற்கு லக்ஷணங்கள் முதலியவையும் விரிவாகக் கூறப்பட்டிருக்கின்றன.
ஆங்கிகம், வாசிகம், ஆகார்யம், சாந்திகம் என்னும் நான்குவித ப்பாவங் களினால் ஏற்படும் ஸ்ருங்காரம், வீரம், கருணை, அற்புதம், ஹாஸ்யம், பயாதிகம், பீபத்ஸம், ரெளத்ரம், சாந்தம் முதலிய நவரசங்களில்
ஸ்ருங்காரம், என்பது
சம்போக ஸ்ருங்காரம், விப்ரலம்ப ஸ்ருங்காரம்
என்று இரு வகையாகும்.
இதில் சம்போக ஸ்ருங்காரம் காதலர்கள் எண்ணம் கை கூடுவதால் ஏற்படுவது.
விப்ரலம்பம் காதலர்கள் ஒருவரை ஒருவர் பிரிவதால் ஏற்படுவது அல்லது உத்தம நாயகி ஒருத்தி தான் நேரில் அல்லது கனவில் கண்டோ அல்லது குணாதி விசேஷங்களைக் கேள்வி யுற்றோ, காதலித்த கணவனை அடைய முடியாமல் இருக்கும் தருணத்திலோ, ஏற்படும் விரகதாபங்களை விப்ரலம்ப ஸ்ருங்காரம் என்று கூறுவர்.
உதாரணமாக ருக்மணிதேவி கிருஷ்ணனுடைய குணாதி விசேஷங்களைக் கேள்வியுற்று காதல் கொள்கிறாள்.
இதற்கு ‘ஸ்ருத்வாகுணான் புவன சுந்தரஸ்ருண்மதாந்தே’ எனும் ஸ்லோகப் பூர்வமாகத் தெரிகிறது.
பாணாசுரனின் பெண் உஷாதேவி, அநிருத்தனைக் கனவில் கண்டு காதல் கொள்ளுகிறாள்.
சீதாதேவி ராமனை நேரில் கண்டு காதல் கொள்ளுகிறாள்.
இந்த விப்ரலம்ப ஸ்ருங்காரம் என்பது
விரகம், அயோகம், மானம், ப்ரபாசம், சாந்தம்
என ஐந்து வகையாகும்.
இதில் விரக விப்ரலம்ப ஸ்ருங்காரத்திற்கு இதிகாச புராணங்களில் எவ்வளவோ சம்பவங்களும் விசேஷங்களும் காணக் கிடைக்கின்றன.
பழைய பதங்கள் என்னும் காரணத்தினால் ஆபாசமான கருத்துக்கள் உள்ள அநேக பதங்களையும், ஸ்லோகங்களையும் தற்காலம் அநேகர் கையாளுவதைப் பார்த்து வருந்தத்தான் வேண்டியிருக்கிறது.
பழைய பதங்களாய் இருந்த போதிலும் ஆபாசமான கருத்துக்கள் இல்லாமல் உயர்ந்த கருத்துக்கள் உள்ளதாய்த் தேர்ந்தெடுத்துக் கையாளப்படுவதுதான் அறிவுடைமையாகும்.
பொதுவாக விரக விப்ரலம்ப ஸ்ருங்காரத்தால் ஒரு நாயகிக்கு ஏற்படும் விரக தாபத்தின் செயல்களை, பல நூல்களில் முன்னோர்களால் கூறப்பட்டிருப்பதைக்
கீழே எழுதுகிறேன்.
அன்னம், பால், பழங்கள் முதலிய உணவுகளையும், ஆடை ஆபரணம் முதலிய அலங்காரங்களையும் அன்பாக வளர்க்கும் கிளி, மான், குயில், அன்புக்குரிய தோழிகள், தாய் முதலியோரையும் கூட வெறுக்கும்படி நேரிடும்.
தேகம் இளைத்துப் போகும்.
வெட்கம் நீங்கிப் போகும்.
நெஞ்சம் புண்ணாய் இருக்கும்.
கண்ணீர் பெருகும், பெருமூச்சு, அதிகமான சிந்தனை, நடுக்கம், சோகம் முதலியவைகள் உண்டாகும்.
ஒரு நிமிஷம் என்பது ஒரு யுகம்போல் தோன்றும்.
கழுத்தில் அணிந்திருக்கும் முத்தாரங்கள் நீற்றுப் போகும்.
அதரம் வெடித்துப் போகும்.
கை வளையல்களும், இடுப்பு ஒட்டியாணமும் நழுவிவிடும்.
தனிமையில் இருக்கப் பிரியம் உண்டாகும்.
நாயகன் வரும் காலத்தைக் குறி பார்ப்பாள். அவன் பிரிந்த நாளை எண்ணி வருந்துவாள். இனி எப்பொழுது வருவானோ என்று ஏங்குவாள்.
சொப்பனத்தில் நாயகன் வந்ததாகக் கனவு கண்டு திடுக்கிட்டு எழுவாள்.
ஜாக்ரதாவஸ்தையில் அவள் பார்க்கும் பொருள்கள் எல்லாம் நாயகன் போலத் தோன்றும். நாயகன் பேச்சு என்றால் சந்தோஷமும் மற்ற விஷயங்கள் பேசினால் அருவருப்பும் உண்டாகும். நாயகனால் செய்யப்படும் செய்கைகளையும் அவனுடைய படங்களையும் ஆடை ஆபரணங்களையும் தானும் நாயகனும் கூடியிருந்த இடங்களையும் கண்டு மலைப்பாள்.
தன் விதியை நினைத்து உருகுவாள். இனியேனும் இவ்வித சங்கடம் நேராமல் இருக்கவும் துயரங்கள் தீரவும் தெய்வத்தைக் கோருவாள்.
இதுபோல் இன்னும் அநேக விதமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த விதமானப் ப்பாவங்களுக்குத் தகுந்ததாய்த் தெலுங்கு, சம்ஸ்கிருதம், தமிழ் முதலியவற்றில் அநேக பழைய பதங்கள் இருந்தாலும், சமீப காலத்தில் கவி சிரேஷ்டர்களாய் விளங்கியவர்களில் அமரகவி பாரதியார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களும் இயற்றிய பாடல்களில் இந்த விப்ரலம்ப ஸ்ருங்காரத்திற்குப் பொருத்தமான அநேக பாடல்கள் இருக்கின்றன.
அமரகவி பாரதியார் இந்த விப்ரலம்ப ஸ்ருங்காரத்தை எவ்வளவு தெளிவாக
“தூண்டில் புழுவினைப்போல் “
என பாடல் வா்ணிக்கிறது.