அட்ட வீரட்டான தலங்களுள் ஒன்று, வழுவூர். பிரளய காலத்தில் உலகமெலாம் அழிந்தும், அவ்வூர் அழியாமல் வழுவியதால் வழுவூர் என்று பெயர் ஏற்பட்டது.
இதற்கு புராணத்தில் சதயபுரி, பர கைலாசம், ஞானபூமி என்ற பல பெயர்கள் வழங்குகின்றன. கல்வெட்டுகளில் வழுகூர் என்று காண்கிறது.
இங்குள்ள கோயில் பிரமாண்டமானது. முன் ராஜகோபுரம் சுமார் 150 அடி உயரமும் ஐந்து கண்களும் கொண்டது. திருக்குளம் ஈசான தீர்த்தம் மிகவும் பெரியது. சுவாமி, அம்மன் சந்நதிகள் தனித்தனியாக உள்ளன. தல விருட்சங்கள் – தேவதாரு, வன்னிமரம்.
சுவாமியின் பெயர் வீரட்டேசுவரர், கிருத்திவாஸேசுவரர் (யானையின் தோலைப் போர்த்தியவர்) என்றும் பெயருண்டு. அம்பிகை – பாலாங்குராம்பாள். இவருக்கு – கிருபாவதி என்றும் பெயர்.
கல்வெட்டுகளில் சுவாமியின் பெயர் வீரட்டானம் உடையார், வழுவூர் நாயனார் என்று குறிப்பிடப்பட்டுள்ளன.
பிரானின் ஐந்து முகங்கள் ஐந்து தீர்த்தங்களாக அமைந்துள்ளன. பெருமானே தீர்த்தமாக விளங்குகிறார் என்பது ஐதீகம்.
அட்ட வீரட்டங்களில் யானையாக வந்த கஜாசுரனை அழித்த தலம் இது. யானையை உரித்து, அதன் தோலைப் போர்த்தி, அதன் மத்தகத்தின் மீது நின்று இடது உள்ளங்கால் தெரியும் வண்ணம் ஊர்த்துவ தாண்டவம் ஆடுகிறார் பெருமான். இது நவதாண்டவங்களில் ஒன்றாகக் கூறப்படுகின்றது. நடன சபைகளில் ஞானசபையாகப் போற்றப்பெற்றுள்ளது.
சிதம்பரத்தில் “சிதம்பர ரகசியம்’ எனச் சொல்லப்படும் ரகசிய பிரதிஷ்டை அமைந்திருப்பது போல் இங்கும் கஜ சம்ஹார மூர்த்திக்குப் பின்னே ரகசிய யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கஜ சம்ஹார மூர்த்தியின் உள்ளங்காலை தரிசிப்பது மிகவும் சிறப்பானது என்று கூறுகின்றார்கள். சகஸ்ர லிங்க மூர்த்தி இந்தக் கோயிலில் சிறப்பானது. ஒரே லிங்கத்தில் ஆயிரம் சிறிய லிங்கங்கள் உள்ளன.
செப்பு, ஐம்பொன் திருமேனிகள் மிக அழகாக உள்ளன. பிட்சாடன மூர்த்தி சிறப்பானது. கஜசம்ஹார மூர்த்தி போல் திருமேனி எங்கும் கிடையாது. பக்கத்திலுள்ள அம்மன் விக்ரகத்தின் கையில் குழந்தை முருகன் உள்ளான். பெருமானை குழந்தை சுட்டிக் காட்டுவது போல் உள்ளது.
மாசி மகம் பொளர்ணமியன்று காலையில் கஜசம்ஹாரம் நடைபெறுகிறது. ஆண்டில் ஆறுமுறை கஜசம்ஹார மூர்த்திக்கும் நடராஜருக்கும் சமயாச்சாரியார்களுக்கும் அபிஷேகம் நடைபெறும்.
புராண வரலாறு: கஜாசுரன் என்ற யானை வடிவம் கொண்ட அசுரன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் துன்பம் விளைவித்தான். சிவபெருமான் அவனைக் கொன்று அவன் தோலை கிழித்துப் போர்த்திக் கொண்டார் என்பது புராண வரலாறு.
தாருகாவனத்து முனிவர்கள் சிவபக்தி இல்லாமல் செருக்குடன் இருந்தனர். அவர்கள் கர்வத்தை அடக்க பெருமான் வசீகரிக்கும் தோற்றத்துடன் அவர்களின் முன்பாகச் சென்றார். முனிவர்கள் அவரைக் கொல்ல நினைத்து யாகம் செய்து பலபொருள்களை அவர்மீது ஏவினார்கள். அவற்றையெல்லாம் அழித்தும், ஏந்தியும் அவர்களின் செருக்கை அடக்கினார்.
அவர்கள் பெருமானை வேண்டவே, அவர்களுக்கு ஞானோபதேசம் செய்தார்.
திருமால் மோகினி வடிவத்தோடு மோகனாம்பாளாக எழுந்தருளினார். பெருமான், மோகினியைப் பார்த்தவுடன் ஐயனார் பிறந்தார்.
முனிவர்களால் ஏவப்பட்ட அக்னி, புலி, மான், மழு, பாம்பு, முயலகன் மீது காலை ஊன்றி நர்த்தனம் புரிந்தார். இதுவே நடராஜப் பெருமானின் உருவத் தத்துவம்.
இத்தலம் பற்றி அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் உண்டு.
எங்கே இருக்கு?: நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் சாலையில் 10 கி.மீ. தொலைவில் வழுவூர் உள்ளது.